நியாயம் தீர்த்தல்
மத்தேயு 7:1 "நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்க்கப்படாத படிக்கு மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்". இது இயேசு கிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில் கற்பித்த மிக முக்கியமான ஒரு படிப்பினை.
இன்று மனிதர்களின் உடையை வைத்து அவர்களின் குணங்களை சொல்ல முயலும் உலகத்திலே வாழ்கிறோம். அல்லது ஒருவரின் செயல்களை வைத்து அவர் எப்படிப் பட்டவர் என சொல்ல முயல்கிறோம்
ஒரு நாள் ஒரு மகனும் தந்தையும் ரயிலில் பயணம் செய்வதற்காக ரயிலில் ஏறி உட்கார்ந்தனர், அவர்களுக்கு முன்பக்கத்திலே ஒரு இளம் காதலர்கள் உட்கார்ந்திருந்தனர். இந்த தந்தை தனது மகன் ஜோனுக்கு ஜன்னல் இருக்கையை கொடுத்து பக்கத்திலே அமர்ந்துக் கொண்டார். தனக்கு முன் இருக்கையில் இருந்தவர்களோடு ஜோனின் தந்தை பேச்சுகொடுத்தார். ரயில் புறப்பட தயாரானது ஆனால் ஜோனின் செயற்பாடுகள் ஆச்சரியமூட்டும் விதத்தில் இருந்தது என்றாலும் அந்த இளம் வயது காதலர்கள் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ரயில் மெதுவாக நகர்ந்தது, ஜோன் ஜன்னலின் வெளியே பார்த்து பிரமித்துக்கொண்டு வந்தான். ரயில் நிலையத்திலிருந்த ரயில் வெளியே வந்தவுடன் ஜோன் சத்தமிட்டு அப்பா இங்கே பாருங்கள் இந்த மரங்கள் நகர்கின்றன என்று கத்தினான். அப்பா அமைதியாக ஆம் மகனே என்று பதிலளித்தார். இதைக் கண்ட அந்த இளம் ஜோடு இவர்களோடு பேசுவதை வெட்கமாக எண்ணினார்கள். திடீரென மீண்டும் ஜோன் தன் தந்தையை நோக்கி அப்பா இங்கே பாருங்கள் இந்த மலைகள் பின்னோக்கி நகர்கின்றன என்றான் தந்தையும் வழக்கம்போல ஆம் மகனே என்றார். மீண்டும் அதிக சத்தமாய் ஜோன் அப்பா இந்த சூரியன் நம்மோடேயே வந்து கொண்டிருக்கிறது என்றான் தந்தையும் வழக்கம்போல ஆம் மகனே என்றார்.
இதைக் கண்டு எரிச்சலடைந்த அவர்களுக்குமுன் உட்கர்ந்திருந்த அந்த பெண் மெதுவாக தந்தையிடம் வந்து உங்கள் மகனின் வயது என்ன என்றார் அதற்கு 24 என பதிலளித்தார் தந்தை. என் காதலனுக்கும் 24 வயது தான் ஆனால் அவர் எவ்வளவு நாகரிகமாக நடந்துக் கொள்கிறார் உங்கள் மகன் இப்படி நடந்துக் கொள்கிறாரே ஏன் இவரை நீங்கள் ஒரு நல்ல வைத்தியரிடம் காட்டக்கூடாது என கேட்டார். அப்பொழுது அந்த தந்தை கூறிய வார்த்தை அந்த பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீரைக் கசியச் செய்தது. "என் மகன் இன்று தான் முதலாவதாக இந்த உலகத்தைக் கண்கிறான். நாங்கள் இப்பொழுது தான் வைத்தியசாலையிலிருந்து வருகிறோம் இரண்டு நாட்களுக்கு முன் தான் என் மகனின் கண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜோன் ஒரு பிறவிக்குருடனாக இருந்தவன் என்றாலும் இனி அவன் இந்த உலகத்தை பார்க்கலாம்" என்பதே தந்தையின் பதிலாக இருந்தது. அதன்பின் ஜோன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அந்த பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் மல்கியது.
இந்த கதையிலிருந்து ஒரு சில காரியங்களைப் பார்ப்போம். அந்த பெண் ஜோனைப் பார்த்து ஒரு சில காரியங்களை நினைத்தாள்.
1. இவனுக்கு பைத்தியம்
2. இந்த தந்தை தன் மகனை சரியாக கவனிப்பதில்லை
3. நான் அதிர்ஷ்டசாலி ஏனெனில் எனக்கு நல்ல மனநிலையுள்ள ஒரு காதலன் இருக்கிறான்.
இந்தக் கதையை விளக்க நான் இன்னுமொரு கதையை சொல்ல விரும்புகிறேன். ஒரு ஊரில் ஒரு புதுமணத்தம்பதிகள் புதிதாக வாடகைக்கு ஒரு வீடு வாங்கி குடியேறினர். அவர்களின் படுக்கையரை ஜன்னலிலிருந்து பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண்மணி துணி துவைத்து காயவைப்பது நன்றாக விளங்கியது. அப்பொழுது இந்த பக்கத்திலிருந்த மனைவி தன் கணவனை நோக்கி அங்கே பாருங்கள் அந்த பெண்ணுக்கு ஒழுங்காக துணி துவைக்க தெரியவில்லை இவ்வளவு அழுக்கோடு காய வைக்கிறார் என கூறினாள். கணவனும் பார்த்துவிட்டு சிரித்தான். இப்படியாக தினமும் அந்த பெண் துணி காய வைப்பதும் அதை குறை கூறுவதுமே வேலையாக இருந்தாள் இந்த மனைவி. ஒரு நாள் காலை எழுந்ததும் தன் கணவனை அவசரமாக கூப்பிட்டாள் மனைவி. என்னவென்று கேட்ட கணவனிடம், அங்கே பார்த்தீர்களா அந்த பெண் இவ்வளவு நாட்களாக இல்லாமல் இன்று அதிசயமாக சுத்தமாக உடைகளை கழுவியிருக்கிறாள். யாரிடம் கற்றுக்கொண்டாளோ என்று சொன்னாள். அப்பொழுது கணவன் சிரித்துவிட்டு சொன்னான், சற்று முன்னர் தான் அந்த ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்தேன் என்று. பதில் சொல்ல வழியில்லாமல் பேசாமலிருந்துவிட்டாள் மனைவி.
மத்தேயு 7:3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
இந்த கதையிலே பிரச்சனை அந்த உடைகளை கழுவிய பெண்ணிடம் இருக்கவில்லை மாறாக அதைப் பார்த்தவரின் கண்களிலேயே இருந்தது. இன்று நமக்கு ஏதாவது பிழையாக தென்பட்டால் அது நம் பார்வையின் பிரச்சனையாகக் கூட இருக்கலாம். நம் கண்களிலே உத்திரம் இருந்தால் நம் பார்வைக்கு வேறு எதுவுமே தெளிவாக இருக்காது எனவே நம் பார்வையை நேர்த்தியாக வைத்திருப்பது முக்கியமானது.
சில சந்தர்ப்பங்களில் ஒரு சிலரைப் பார்த்து இவர் மிகவும் நல்லவர் என்று சொல்வதுண்டு. அரசியல்வாதிகளை எடுத்துக்கொள்வோம். அவர்கள் எதாவது உதவிகளை செய்யும்பொழுது அவர்களை மிகவும் நல்லவர்களென்று அவர்களை போற்றுவோம் ஆனால் அவர்களின் சுயரூபம் நமக்குத் தெரியவரும் பொழுது நாம் அவர்களை கெட்டவர்கள் என்கிறோம். ஏன் இந்த நிலை? ஒருவர் நல்ல கிரியைகளை செய்தவுடன் அவர்களை நல்லவர்களென்றும் அவர்களின் கிரியைகளினடிப்படையில் கெட்டவர்களென்றும் நாம் தீர்க்கிறோம். ஒருவேளை அவர்களின் செயல் பிழையானதாக இருந்தாலும் அவரின் உள்நோக்கம் கெட்டதாக இருக்கலாம் அல்லது கெட்ட உள்நோக்கங்களோடு நல்ல கிரியைகளையும் வெளிப்படுத்தலாம். ஒருவரின் உள்நோக்கங்களை நம்மால் உணர முடியாது எனவே தான் இயேசு கிறிஸ்து யாரையும் நியாயம் தீர்க்க வேண்டாம் என்றார். ஒரு கிரியையை அது நல்லதா அல்லது கெட்டதா என நம்மால் நியாயம் தீர்க்க முடியும் ஏனென்றால் அந்த கிரியையை நாம் கண்ணூடாக காண்கிறோம். ஆனால் ஒருவரின் உள்நோக்கத்தை எவ்வாறு காண்பது? எனவேதான் அயலவர்களை நியாயம் தீர்க்க வேண்டாம் என இயேசு சொல்கிறார்.
யோவான் 8வது அதிகாரத்தை நாம் வாசித்தால் அதிலே விபச்சாரதில் பிடிபட்ட பெண்ணை கொண்டுவந்து அவளுக்கு கல்லெறிந்து கொலை செய்ய வேண்டுமென பரிசேயர்கள் சொன்ன வேளையிலே இயேசு சொன்ன வார்த்தை உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை அவள்மேல் எறி என்று. எல்லோருமங்கிருந்து போன பின் இயேசு சொன்ன வார்த்தை "போ இனிமேல் பாவம் செய்யாதே". உலகத்தை படைத்த சர்வ வல்ல, சகலமும் அறிந்த இயேசுகிறிஸ்துவே அவளை நியாயம் தீர்க்காத சந்தர்ப்பத்தில் நாம் யார் அடுத்தவர்களை நியாயம் தீர்க்க?
யாக்கோபு 4:12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்த நீ யார்?
இந்த வசனத்தின்படி நியாயத்தீர்ப்பு கர்த்தருக்கே உரியது ஏனென்றால் அவர் ஒருவனை இரட்சிக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் ஆனால் நாம் அடுத்தவர்களை நியாயந்தீர்ப்பதினால் அவர்களை இரட்சிக்க நம்மால் முடியுமா? கடவுளின் கிரியையை நாம் எடுத்துக்கொள்ள முடியாது.
இரா
இரா
வல்லமை
கௌரவம்
படைப்பு
இரட்சிப்பு
ஆராதனை
பாவமன்னிப்பு
நியாயத்தீர்ப்பு
இவை யாவும் கர்த்தருக்குரியது. இவற்றில் எவற்றையேனும் நாம் எடுத்துக்கொண்டோமானால் நாம் தேவ தூஷணம் சொல்லுவதற்கு சமம்.
ஒருவரின் பாவத்தை மன்னிக்கவோ அவரை இரட்சிக்கவோ நமக்கு எந்தளவுக்கு அதிகாரமில்லையோ அதேயளவு அதிகாரம் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதிலும் நமக்கு இல்லை. நமஸ்கரிக்கப்பட வேண்டியவர் தேவன் ஒருவரே ஏனெனில் அவரே நியாயாதிபதி, அவரே சிருஷ்டி கர்த்தர்.
கலாத்தியர் 6:1 சகோதரரே, உங்களில் ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குறியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
ஒருவரையொருவர் தேற்றி அவர்களை சீர்பொருந்தப் பண்ணுவதே நம் கடமையாகும். அவர்களின் குற்றங்களை சொல்லி அவர்களை கேவலப்படுத்துவதல்ல. எனவே தினசரி கீழுள்ள ஜெபத்தை சொல்லி ஜெபிப்போம்.
பரலோகத்தில் வாசமாயிருக்கும் எங்கள் பிதாவே அடுத்தவர்களை குற்றம்பிடிக்காத நியாயம்தீர்க்காத சுத்த இருதயத்தை எனக்குள் தாரும் ஆண்டவரே. நியாயம் தீர்த்தல் உமது அதிகாரம், அதை தட்டிப் பறிக்க முயல்வது பாவிகளாகிய எங்களின் பாவங்களில் மிகப் பெரும் பாவமாய் இருக்கிறது. எங்களை மன்னியும் ஆண்டவரே. இரட்சிப்பின் நித்திய சந்தோசத்தை எனக்குத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபம் கேளும் ஜீவனுள்ள நல்ல பிதாவே
ஆமேன்.
Source reference: நித்திய நற்செய்தி ஊழியங்கள்
Comments
Post a Comment