விடுதலை!
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” யோவான் 8:32
வேத வசனமாகிய சத்தியம் ஒரு மனிதனுக்கு விடுதலையை கொண்டு வரும். வேத வசனத்தை வாசிக்க வாசிக்க இந்த விடுதலையை உணரமுடியும்.
துக்கத்திலிருந்து விடுதலை!
“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.” சங்.119:92
தேவனுடைய வசனம் நமக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆகவே, அதை வாசிக்க வாசிக்க துக்கம் மறைந்து போகும்.
ஒரு கிறிஸ்தவரல்லாத ஒரு தாயார் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் கணவரோ மிகவும் கண்டிப்பானவர். இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதையே விரும்பாதவர். ஆலயத்திற்கோ, கூட்டங்களுக்கோ
இவர்கள் செல்ல முடியாது. டி.வியில் கூட கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்க்க முடியாது.
இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எப்படி விசுவாசத்தை காத்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம் என்னிடத்தில் சொன்னார்கள்:
“வேத புத்தகம்தான் என்னுடைய ஒரே ஆறுதல். துக்கம் என்னை நெருக்குகையில் வேதத்தை திறந்து வாசிப்பேன். அப்பொழுது அதற்குள்ளிருந்து ஆண்டவர் என்னோடு பேசுவதை உணருகிறேன்.”
“வேத வசனங்களே என் மனமகிழ்ச்சி. இந்த வீட்டில் எனக்கு ஒரே துணை வேத புத்தகம்தான்” என்றார்கள் மகிழ்ச்சியோடு.
நீங்களும் வேதத்தை வாசிக்க வாசிக்க கவலையிலிருந்து விடுதலை அடைவீர்கள்.
விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” ரோமர்10:17
அதாவது தேவனுடைய வசனத்தைகேட்கும்போது விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்.
வேத வசனங்களை வாசிக்கத்தான் விசுவாசம் பெருகும். விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறவர் இயேசு கிறிஸ்து எபி. 12:1.
நீங்கள் பரிசுத்தமாய் வாழ விரும்புகிறீர்களா?
தினமும் முழங்காலில் நின்று வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள். வேத வசனங்களை மனப்பாடம் செய்து உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சத்திய வசனமாகிய வேத வசனம் உங்களை பரிசுத்தப்படுத்தும்.
‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே’ சங்.119:9
கர்த்தருடைய வசனங்கள் தான் நம் வழிகளை சுத்தம் பண்ண முடியும்.
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” சங்.119:11.
வேத வசனங்களை வாசித்து, தியானிப்பது மட்டுமல்ல, அதை நம் இருதயத்தில் வைத்து வைக்க வேண்டும்.
வேத புத்தகம் தேவனுடைய வார்த்தைகள்.
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்….இருக்கிறது.” எபி.4:12.
நான் வேதத்தை எடுத்து வாசிக்கும் நேரங்களில், கடமைக்காக வாசிக்காதே என்று என் அம்மா சொல்வார்கள். அப்படி வாசித்தால் வேத வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்களை நாம் புரிந்து கொள்ள முடியாது என்பார்கள். அடிக்கடி அவர்கள் என்னிடத்தில் சொல்வது,
*வேதத்தை தெளிவாய் படி, அதை உறுதியாய் பிடி*
என்ற வார்த்தைதான்.
நீங்கள் எந்த சூழ்நிலைகளில் இருந்து வேதாகமத்தை வாசித்தாலும்,
உங்களுக்கு கைகொடுக்கும்
உற்ற தோழனாகவும்
நெருங்கிய நண்பனாகவும் அது இருக்கும்.
ஆமேன்
அல்லேலுயா.
Comments
Post a Comment