கர்த்தருடைய வழி
“கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?” (எரேமியா 23:18).
இப்போது நம்முடைய பிரச்சனை என்ன என்பது விளங்குகிறதா? கர்த்தருடைய வழி என் வழியாயிருக்கவேண்டும் என்பதை சற்றேனும் நினையாமல், என் வழி கர்த்தருடைய வழி என்பதுபோல நாம் வாழுகிறோம். கர்த்தருடைய நினைவின்படி அல்ல; என் நினைவின்படி கர்த்தர் செயற்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது ஜெபங்களும் அதே பிரகாரம்தான் இருக்கிறது. நமது பிரச்சனைகளையும் முறையிட்டு, அதிலிருந்து தப்பிக்கொள்ளக்கூடிய வழியையும் கர்த்தருக்கு நாமே கற்பித்து, அதன்படி நடக்க கர்த்தரையே அழைக்கின்ற அளவுக்கு நாமேதான் கதாநாயகர்களாகிவிட எண்ணுகிறோம் என்பது தான் உண்மை.
நான் கேட்டேன், கர்த்தர் செய்தார் என்பது தான் அநேகருடைய சாட்சியாகவும் இருக்கிறது. ஆம், உண்மைதான், கர்த்தர் தமது பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்பார், நாம் கேட்டபடியும் செய்வார். அது அவருடைய சுத்த கிருபை. மாறாக, நாம் சொல்ல அவர் கேட்க, அவர் நமது வேலையாள் அல்ல. அவர் கர்த்தர். அவர் ராஜரீகம் செய்கிறவர். அவரது வழிகள் உயர்ந்தவைகள். அவர் நம்மைத் தப்புவிப்பது சத்தியம்; ஆனால் அது நாம் நினைக்கும் வழியில் அல்ல. அவர் வழிகள் உயர்ந்தவைகள்.
“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரேமியா 29:11). நாம் எதிர்பார்க்கும் முடிவை கர்த்தர் தருவார் என்று இந்த வார்த்தையைக் குறித்து தவறான விளக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. வசனத்தை உற்றுக் கவனியுங்கள். நாம் எதிர்பார்க்கும் முடிவு நல்லதுதான். சமாதானம் வேண்டும். தேசம் அமைதியாய் இருக்க வேண்டும். நமது குடும்பம் நன்றாயிருக்க வேண்டும். எல்லாமே நல்லதுதான். கர்த்தர் அதைச் செய்வார். அன்று யூதரும் அதைத்தான் விரும்பினார்கள். தாம் தமது சொந்த தேசத்தில் வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்ததில் தவறில்லை.
ஆனால் கர்த்தர் சொல்லுவது என்ன? நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை நான் தருவேன் என்கிறார். ஆனால், அந்த முடிவை உங்களுக்குத் தரும்படி, நீங்கள் நினைத்திருக்கிற நினைவுகள் அல்ல; ‘…நான் நினைத்திருக்கிற நினைவுகளை நான் அறிவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் தேசத்திற்கு திரும்ப வருவீர்கள். ஆனால் எழுபதுவருட சிறையிருப்பின் பின்னர்தான். ஆலயத்தைக் கட்டி எழுப்புவீர்கள். இப்போது பாபிலோனின் சிறையிருப்புக்குப் போங்கள்; சிறைப்பட்டுப்போகும் தேசத்தில் சந்தோஷமாய் இருங்கள். ஏனெனில் அங்கேயும் நானே உங்களோடு இருப்பேன் என்கிறார் கர்த்தர். மேலும், சிறைப்பட்டுப் போயிருக்கிற பட்டணத்தின் சமாதானத்திற்காக விண்ணப்பம் பண்ணுங்கள், அதற்குச் சமாதானம் இருந்தால் உங்களுக்கும் சமாதானம் என்கிறார். இது விநோதமாக இல்லையா? ஆனாலும் கர்த்தருடைய வழி அதுதான்.
அந்த வார்த்தைக்கு ஏற்ப கடைசி வரைக்கும் உண்மையாயிருந்தவர்கள் சந்தோஷமாக தேசத்திற்கு திரும்பினார்களா இல்லையா? அந்த சிறையிருப்பின் காலத்தில் புறவினத்தாராகிய அந்த பாபிலோன் மக்களும் ராஜாக்களும் இஸ்ரவேலின் தேவனே தேவன் என்று கண்டுகொண்டார்களா இல்லையா? கர்த்தரே ராஜரீகம் பண்ணுகிறவர் என்பதைக் கண்டு கொண்டார்களா இல்லையா? தேவனுடைய வல்லமையை ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அனுபவித்தானா இல்லையா?
சீரிய நாட்டு இராணுவத் தளபதியாகிய நாகமான் என்ற ஒரு மனுஷனுடைய சரீர சுகத்திற்காக மாத்திரமல்ல, அவனுடைய ஆத்தும இரட்சிப்புக்காக, சீரிய நாட்டுக்கு கர்த்தர் அவன் மூலமாகவே ஜெயத்தைக் கொடுத்து, இஸ்ரவேலிலே ஒரு சிறு பெண்ணுக்கு சிறைவாசத்தையும், அவனுடைய வீட்டிலேயே அவளை வேலைக்காரியாகவும் அனுமதித்தாரே. அந்த நாகமான் இஸ்ரவேலின் தேவனே தேவன் என்று பகிரங்கமாக அறிக்கையிட்டான் அல்லவா! ஆம், கர்த்தருடைய வழிகளை அறியத் தக்கவன் யார்?
தேவபிள்ளையே, நீ தேவனுடைய பிள்ளைதானா? அப்படியானால் ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள். கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது பரலோகில் அவரோடு வாசம்பண்ணுவதற்காக மாத்திரம் அல்ல. இந்தப் பூவுலகில் அவருக்கென்று வாழுவதே நம்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற முக்கியமானதும் முதன்மையானதுமான நோக்கமாகும். ஆகவே, அவரிடத்தில் அன்பு கூருகிற நமக்கு சகலத்தையும் அவர் நன்மையாகவே மாற்றிக்கொடுப்பார். நமது பிரச்சனைகள் நீங்குவது நல்லதுதான். ஆனால் அதே சமயம் நம் பாடுகளுக்கூடாக இன்னொருவன் அல்லது இன்னொரு குடும்பம், அல்லது நமது தேசம் சந்திக்கப்படுமானால் அது எத்தனை பெரிய ஆனந்தம் தெரியுமா?
பிரச்சனைகளைக் கர்த்தரிடத்தில் முறையிடுவதில் தவறில்லை. வேறு யாரிடத்தில் போய் முறையிடுவது? ஆனால் வழிகளைக் கர்த்தரிடத்திலே விட்டுவிடுவோமாக. அவர் வழிகளிலே நமது விருப்பத்துக்கு மாறானவைகளும், திடுக்கிடும் காரியங்களும் சம்பவிக்கலாம்; சம்பவிக்கட்டும். தோற்றுப்போய்விட்டது போலவும் தெரியலாம். தெரியட்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அவர் காட்டும் வழி நமது இருதயத்துக்கு ஏற்றதாய் இருக்காவிட்டாலும், சரணாகதியாய் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அவர் பெரிய காரியங்களை நிச்சயம் செய்வார். அவருடைய வழிகள் உயர்ந்தவைகள். இதை உணர்ந்தோமானால் நம்முடைய பல தடுமாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் உரிய பதில் கிடைத்து விடும். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.
அல்லேலூயா.


Comments
Post a Comment